வ. வே. சு. ஐயர்

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட வ.வே.சு. ஐயர் 1881-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் நாள் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள வரகநேரி என்னும் ஊரில் பிறந்தார். வ.வே.சு. ஐயரின் பெற்றோர்களின் பெயர் வேங்கடேச ஐயர்-காமாட்சி அம்மாள். பெற்றோர்கள் இவருக்கு சுப்பிரமணியன்' எனப் பெயர் சூட்டினார்.

வரகநேரி வேங்கடேச சுப்பிரமணியம்தான் வ.வே.சு.
ஐயர் என சுருக்கமாகவும் அன்புடனும் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் வயதில் சுப்பிரமணியம் ஆங்கில மொழியைக் கற்றதோடு லத்தீன் மொழியையும் ஆர்வத்தோடு கற்றுக் கொண்டார். தாய்மொழியான தமிழையும் சிறப்பு முறையில் கற்றுக் கொண்டார்

மெட்ரிக் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே ஐந்தாவது மாணவராக வெற்றி பெற்றார். தனது மகனை வழக்குரைஞராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எஃப்.ஏ.வகுப்பில் சேர்த்தார் சுப்பிரமணியத்தின் தந்தை. அதிலும் முதல் மாணவராகத் தேர்ச்சி அடைந்தார். அந்தக் காலத்தில் இருந்த வழக்கத்தின்படி படித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்வது என பெற்றோர்கள் முடிவு செய்தார்கள்

பாக்ய லட்சுமி என்ற பெண்ணை சுப்பிரமணியனுக்கு மணம் முடித்து வைத்தார்கள்.

சுப்பிரமணியன் திருமணத்திற்குப் பிறகு பி.ஏ. வகுப்பில் சேர்ந்து படித்தார். பி.ஏ. தேர்வில் கலந்து கொண்டு பட்டம் பெற்றார். சென்னையில் உள்ள சட்டக்கல்லூரியில் பி.எல்
கல்வி படிப்பதற்கு சேர்ந்தார்

சட்டக் கல்லூரியில் சேர்ந்த சுப்பிரமணியம் மிகுந்த ஆர்வத்தோடு படித்து பி.எல். பட்டம் பெற்று திருச்சிராப் பள்ளி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பொறுப்பு பெற்றார்.

சுப்பிரமணியரின் மனைவி பாக்யலெட்சுமியின் உறவினர் பர்மாவின் தலைநகரான ரங்கூனில் தொழில் செய்து  வந்தார். சுப்பிரமணியனையும்  பாக்யலெட்சுமி யையும் ரங்கூனுக்கு வருமாறு அழைத்தார்

வழக்குரைஞர் தொழிலை சுப்பிரமணியம் ரங்கூனில், ஆறு மாதங்கள் நடத்தினார். பின்பு பாரிஸ்டர் பட்டம்பெறுவதற்காக லண்டனுக்குச் சென்றார். பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்பு தனது குடும்ப நிலையை உயர்த்த வேண்டும் என்று நினைத்திருந்தார். லண்டனுக்கு வந்ததும் சுதந்திரப் போர் வீரனாக மாறினார். ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும் என்ற தீவிர சிந்தனையுடன் செயல்பட்டார்

இங்கிலாந்திலும் இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பல திட்டங்களைத் தீட்டினார் வ.வே.சு. ஐயர்

துப்பாக்கி சுடும் பயிற்சியைப் பெறுவதற்காக பாரிஸ் சென்றார். பாரிஸிலிருந்து துப்பாக்கிகளை வாங்கி பம்பாய்க்கு அனுப்பி வைத்தார்

லண்டனுக்கு காந்தியடிகள் வந்திருந்தபோது அவரை சந்தித்து நட்பை ஏற்படுத்திக் கொண்டார் வ.வே.சு. ஐயர்.
இந்தியாவிற்கு சுதந்திரம் பெறுவதற்கான வழி பலாத்காரம் தான் என வ.வே.சு. ஐயரின் மனதில் அசைச்க முடியாத கருத்தாக வேரூன்றி இருந்தது

பாரிஸ்டர் பட்டம் பெறும் ஒவ்வொருவரும் பிரிட்டிஷ் அரசின் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என கட்டுப்பாடு இருந்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என செயல்பட்ட வ.வே.சு. ஐயர் பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக பிரிட்டிஷ் அரசின் உறுதிமொழியை ஏற்க மறுத்தார்

எனவே சட்டக்கல்லூரியில் படித்து வெற்றி பெற்று பாரிஸ்டரானாலும் அந்தப் பட்டத்தை வ.வே.சு. ஐயர் பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நாட்டின் சுதந்திரம் பிரதானம் என முடிவு செய்தார்

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் ஆணிவேரைத்  தகர்க்கும் தளபதியாக வ.வே.சு.ஐயர் 
போர்க்கோலம் பூண்டார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசமாய் வ.வே.சு  ஐயர் உறுதிமொழி எடுத்துக் கொள்ள மறுத்ததை அறிந்த லண்டன் ரகசிய போலீஸ் துறையினர் வ.வே.சு. ஐயரை  தீவிரமாய் கண்காணிக்கத் தொடங்கினர்

லண்டன் நகரில் இருந்தபடியே தமிழ் நாட்டுப் பத்திரி கைகளுக்கு சுதந்திர உணர்வுகளைத் தூண்டும் வகையில் கட்டுரைகளும், கவிதைகளும் எழுதி அனுப்பினார். வ.வே.சு ஐயரின் கருத்துக்கள் தமிழ் மக்களிடையே சுதந்திர வேட்கையையும், நாட்டுப்பற்றையும் ஏற்படுத்தின. இதனால் பிரிட்டிஷ் அரசு வ.வே.சு. ஐயர் மீது மிகுந்த கோபம் கொண்டது 

வெள்ளையரை இந்தியாவிலிருந்து விரட்டுவதற்கு பலாத்காரம்தான் ஒரே வழி என்ற கருத்தைக் கொண்டனர் மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பிறந்த சாவர்க்கர் 

தேசப்பற்று மிக்க சாவர்க்கர் லண்டனில் பாரிஸ்டர் படிப்பு படிக்கச் சென்றார். இந்திய இளைஞர்களை ஒன்று திரட்டி 'சுதந்திர இந்திய சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கினார். இந்திய இளைஞர்களுக்கு நாட்டுப்பற்றை ஏற்படுத்தி அவர்களுக்குத் தலைவராக இருந்தார்

ஜாக்சன் கொலை வழக்கு சம்பந்தமாக சாவர்க்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வ.வே.சு. ஐயர் சிறைக்குச் சென்று சாவர்க்கர் பார்த்துவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்

பிரிட்டிஷ் அரசு வ.வே.சு.ஐயரைம். கைது செய்து    சிறையில் அடைக்க வேண்டும் என முடிவு செய்தது ஆனால்

வ.வே.சு.ஐயர் போலிஸாரை ஏமாற்றிவிட்டு பாரிசுக்குச் சென்றார். அங்கு இருக்கப் பிடிக்காமல் பார்சிக்காரர் போல மாறுவேடம் அணிந்து கொண்டு ரோம் நகருக்குச் சென்றார் 
சில மாதங்கள் ரோம் நகரில் இருந்துவிட்டு முஸ்லிம் பெருமகன் போல் வேடமிட்டுக் கொண்டு மக்கா மாநகரில் வாழ்ந்தார். பின்பு கப்பல் ஏறி பம்பாய் வந்தார். சுதந்திர இந்தியாவுக்காகப் பாடுபடும் ஓர் இந்தியக் குடிமகனாக தலைகாட்ட முடியவில்லையே என்ற வருத்தத்தோடு நடமாடினார். தன்னை கண்டுபிடித்து விடுவார்களோ என்ற எண்ணத்தில் கொழும்புக்குச் சென்றார். அவரிடமிருந்த வன்முறை உணர்வு சிறிது சிறிதாக அவரை விட்டு விலகியது.

கொழும்பிலிருந்து பிரெஞ்சு ஆட்சி நடைபெற்று வந்த புதுச்சேரிக்கு சென்றார். தமிழ் மக்களைக் கண்டதும் மனதில் மட்டில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. சுப்பிரமணிய பாரதியார், அரவிந்த கோஷ் போன்ற பல தேசபக்தர்கள் புதுச்சேரியில் தங்கி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுடன் வ.வே.சு. ஐயர் நட்பு கொண்டு தேசப்பணியில் ஈடுபட்டார்

வெள்ளையரை விரட்டுவதற்காக தமிழ்நாட்டு இளைஞர்கள் புதுச்சேரி சென்று துப்பாக்கி சுடும் பயிற்சியை வ.வே.சு. ஐயரிடம் கற்றுக்கொண்டார்கள். இங்கிலாந்து நாட்டில் இருந்து தப்பித்து வந்த வ.வே.சு. ஐயர் புதுச்சேரியில் பிடித்துவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு தீவிரமாய் இருந்தது. கடுமையான முயற்சிகள் செய்தும் பிரிட்டிஷ் அரசின் எண்ணம் ஈடேறவில்லை

வன்முறையால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற முடியாது. அரசியல் விடுதலைக்கு சாத்வீசு முறையே சிறந்தது

என்பதை வ.வே.சு. ஐயர் உணர்ந்து கொண்டார். காந்தியடிகளின் அகிம்சை வழியைப் பின்பற்றினார். காந்தியடிகள் பிரிட்டிஷ் அரசினை வேண்டியதற்கிணங்க வ.வே.சு
ஐயரின் மீதிருந்த எல்லா வழக்குகளையும் திரும்பப் பெற்றுக்கொண்டது.

வ.வே.சு. ஐயர் சிறந்த எழுத்தாளராக,  சிந்தனையாளராக, தமிழ் இலக்கியவாதியாக பல முகங்களைக் கொண்ட பண்பாளராக விளங்கினார்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் ஆஸ்ரமம் ஒன்றை நிறுவினார். 'பரத்வாசர் ஆசிரமம் எனப் பெயரிட்டார். குழந்தைகளுக்கு தேசிய பண்பாட்டுக் கல்வியை கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குருகுல முறையில் கல்வி கற்பிக்கப்பட்டது. குருகுலத்திற்கு தமிழ் குருகுலம் எனப் பெயர் சூட்டினார்

ஆசிரமத்தில் அச்சுக்கூடம், ஆசிரம அலுவலகம் மற்றும் விவசாயப் பண்ணையும் அமைக்கப்பட்டது. ஆசிரமத்தில் பல்வேறு சாதிகளைச் சார்ந்த மாணவர்கள் கல்வி கற்றார்கள்.

பால பாரதி' என்ற மாத இதழை நடத்தி வந்தார்
அதன் மூலம் கிடைத்த குறைந்த வருமானத்தின் மூலம் குடும்ப வாழ்க்கையை நடத்தினார்

சந்திரகுப்த மௌரிய சக்கரவர்த்தியின் சரித்திரம் மங்கையர்க்கரசியின் காதல், தன்னம்பிக்கை, நெப்போலியன் கம்பராமாயணம் போன்ற படைப்புகளை உருவாக்கினார்

திருக்குறளையும், குறுந்தொகையையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் வ.வே.சு. ஐயர், தேசபக்தன்' என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது

காந்தியடிகளின் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு
"தேசபக்தன் பத்திரிகை மிகுந்த ஆதரவை ஏற்படுத்தியதால் பிரிட்டிஷ் ஆட்சி வ.வே.சு. ஐயர் சிறையில் அடைக்கத் தீர்மானித்தது. வ.வே.சு. ஐயர் மீது பொய் வழக்கு போட்டு ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது.

சிறையிலிருந்து விடுதலையான பின்பு “தேசபக்தன் பத்திரிகை மூடப்பட்டு இருந்ததைக் கண்டு மிகவும் வேதனை யடைந்தார். வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக்கூட கவலைப்படவில்லை. இந்திய நாட்டிற்கு எப்பொழுது சுதந்திரம் கிடைக்கும் என்ற ஏக்கம்தான் அவரது மனதை வாட்டியது

தனது மகளை அழைத்துக்கொண்டு குற்றாலம் சென்றிருந்தார் வ.வே.சு. ஐயர். அவரது மகள் முன்னால் நடக்க பின்னால் வ.வே.சு. ஐயர் நடந்து சென்று கொண்டிருந்தார். நடந்து செல்லும்போது அவரது மகள் கால் தவறி அருவியில் விழுந்து விட்டார். தனது மகளை காப்பாற்ற வ.வே.சு. ஐயரும் அருவியில் குதித்தார். இரண்டு பேருமே அருவியில் மூழ்கி உயிர் துறந்தனர்

வ.வே.சு. ஐயர் தனது 44-ஆம் வயதில் 3.6.1925-ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட வ.வே.சு. ஐயரின் புகழ் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்

Previous Post Next Post